2011-09-06

நானும் அவைகளும் -7

நான் செல்வதற்கு முன்பே எனது கணக்கு ஆசிரியை வந்துவிட்டார்.  என் நல விசாரிப்பிகளுக்காக அவர் பத்து நிமிடம் பாடத்தை நிறுத்த வேண்டியதாய் இருந்தது. இதனால் பலரின் ஆசிர்வாதங்களை ஏற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானேன்.

கணக்கு ஆசிரியை முதல்வர் போல் இல்லை, கனிவாக தான் விசாரித்தார். இருந்தாலும் கடைசியாக அடுத்த வாரம் வரும் தேர்வை நியாபகடுத்தி கொஞ்சம் கிலியையும் கிளப்பினார். குறை கூற கூடாது அவர்தம் கடமையை சரியாக செய்கின்றார்.

எப்பொழுதும் கணக்கு ஆசிரியை பாடம் நடத்தும் பொழுது, அவர் கரும்பலகையுடனும் (அதாங்க Blackboard), நாங்கள் எங்கள் அருகில் உட்கார்ந்து இருபவனிடமும் பேசுவதே எங்கள் பழக்கம். சில சமயம் யாராவது தப்பித்து போய், அவனையே அறியாமல் பாடத்தை கவனித்தாலோ, இல்லை பாடத்தை ரொம்ப ரசித்து, தூங்கிவிட்டலோ அவனிடம் சாக்பீசால் பேசுவோம். (Chalkpiece - மன்னிக்கவும் இதற்கு சரியான தமிழ் வார்த்தையை என்னால் நினைவு கூற முடியவில்லை).

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். அனைவரும் உன்னிப்பாக பாடத்தை மட்டும் கவனித்து கொண்டு இருந்தனர். இந்த புதிய பழக்கமும் , மருத்துவர் தந்த இனிப்பான மருந்தும் என்னை அரை தூக்கத்திற்கு அழைத்து சென்றன. மதிய உணவு வேலை உணர்த்தும் நிமித்தமாக அடித்த மணியே என் உறக்கத்தை கலைத்தது. மற்றவர்களுக்கு வெறும் நான்கு ஆசிரியர்கள் தான் வந்து போயிருந்தனர். என் மண்டைக்குள் நாற்பதிற்கும் மேலானவர்களும், நடு நடுவே Mr.பாகவதர் கூட வந்து போயிருந்தனர்.

ஒரு வாரம் அம்மாவின் பத்திய உணவினால் செத்துப்போன நாக்கை உயிர்பெற வழிதேடி, நண்பனிற்கு அழைப்பு விடுத்தேன், "இன்னைக்கு என்னடா உன்னோட மதிய ஸ்பெஷல்?" அவன் வீட்டில் பெரும்பாலும் முட்டைகளும், மசாலாக்களும் தான். என்றும் போல் இல்லாமல் பெரிதாய் சிரிக்க கூட இல்லாமல், வேண்டதவனுக்கு தருவது போல் உணவு பேழையை  என்னிடம் நீட்டினான். புரியவில்லையா ? Lunch Box ஐ தான் நீட்டினான்.

"என்னடா நானும் பார்த்துகிட்டே இருக்கேன், யாரும் இன்றைக்கு என்னிடம் சரியாகவே பேசவில்லை. நீ என்னடான வேண்டாதவனுக்கு கொடுப்பது போல் எனக்கு தருகிறாய். உங்களுக்கு என்னதாண்ட பிரச்சினை? " நிஜமாகவே எனக்கு கோபம். அவனோட Lunch box ல தயிர் சாதம்!!!

"உனக்கு நிஜமாவே தெரியாதா?" தயிர் சாதத்தில் பாதியை ஒரு கையால்  எடுத்து தன்னுடய தட்டில் வைத்துகொண்டே என்னை விசாரிப்பது என்னுடைய இன்னுமொரு உயிர் நண்பன்.  அவனக்கு தயிர் ரொம்ப இஷ்ட வஸ்து.

நாலு அடி தள்ளி உட்கார்ந்து "டேய், மறந்துடிங்களா? அவன் ஒரு வாரம் லீவு." அவர்களிடம் என் உண்மை நிலை உரைப்பவன் இன்னொரு உயிர் நண்பன். இவனுக்கு தயிர் என்றால் அலர்ஜி , அதனால் தான் அந்த நாலு அடி.

"ஆமாம்ல, நான் மறந்துட்டேன்டா. உன்னையும் சந்தேக பட்டுட்டேன்டா" இது தயிர் சாதம் கொண்டுவந்தவன் கூற்று.

"எனக்கு ஒன்றும் புரியலைடா, என்ன நடந்தது? என்ன சந்தேகம்?" வேற யாரு நாந்தான் கேட்டேன். மறுபடியும் காய்ச்சல் வருவது போல் இருந்தது, அவர்கள் பேசிய பேச்சு.

தயிர் காதலன் தான் விவரித்தான் "ஒன்றும் இல்லைடா, நம்ம வகுப்பில் ஒரு லவ் லெட்டர் கீழ் கிடந்தது. நம்ம வகுப்பாசிரியர் அதை எடுத்து படிச்சிட்டார். யார் யாருக்கு எழுதினதுன்னு தெரியலை. நான்கு நாலா எல்லாரையும் விசாரிச்சு பெண்டு கழட்டிட்டாங்க. யாருமே ஒத்துக்கில்லை. அதான் எல்லோரும் அடுத்தவனை சந்தேகமாகவே பாக்கிறாங்க."

ஏழாவது வகுப்பறையில் காதல் கடிதமா?


2 comments:

 
Back to top!